Thursday, 9 February 2017

மூன்றாம் உலகப்போர் - Third World War - வைரமுத்து - Vairamuthu


மூன்றாம் உலகப்போர்-போர்கள் மனித நாகரிகத்தின் அடித்தளம். எங்கெல்லாம், எப்பொழுதெல்லாம் போர்கள் நடந்ததோ அங்கெல்லாம், அப்பொழுதெல்லாம் மனித நாகரிகம் அடுத்த கட்டம் நோக்கி முன்னேறியது. மரத்தில் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்களை, போர் புரிந்து அழித்து க்ரோமேக்னன் மனிதர்களாகிய நாம் நாகரிகம் அடைந்தோம். 

உலகம் முழுக்க தமிழர் வீரம் பரவியது நம் சேர-சோழ-பாண்டிய மன்னர்கள் கலிங்கம் முதல் சாவகம் வரை போர் புரிந்து வென்றதனால். ஜப்பானின் இன்றைய அசுர பொருளதார, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணம் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் "லிட்டில் பாய்" மற்றும் "பேஃட் மேனின்" விளையாட்டால் தான். முதலிரண்டு உலகப்போர்கள் மனிதனால் மனிதன் மீது தொடுக்கப்பட்டது. அங்கே ஆயுதங்கள் கொண்டு போர் செய்தனர். 

ஆனால், என் கவிஞர் கருப்புத்தங்கம் வைரமுத்து சொல்லும் மூன்றாம் உலகப்போர், மனிதன் இயற்க்கை மீது தொடுத்தானா? இல்லை இயற்க்கை மனிதன் மீது தொடுத்ததா? வினாக்கள் எவ்வாறாயினும் அழிவு மனிதனுக்கே. இன்று கையில் பீட்சாவும், பர்கரும் உண்டு வியர்வைக்கே வேலை வைக்காத வேலைக்கு சென்று கொண்டிருக்கிறோம். 

இன்னும் 50 வருடங்கள் கழித்து நம் பிள்ளைகள் பீட்சாவை தாங்கி பிடிக்குமளவு சிரமமில்லாமல் அதற்கு நேரமுமில்லாமல் ஒரு மாத்திரையை விழுங்கி ஒட்டம் பிடிப்பார்கள் அலுவலக வண்டியில். இதனை, புள்ளி விவரங்கள் மூலமாகவும் அறிவியல் மூலமாகவும் புத்திக்கு பாடம் சொல்கிறார் வைரமுத்து. 

பொதுவாக புத்தகத்தின் பக்கங்களில் காகித வாசனை விசிறியடிக்க படிக்கும் சுகமே தனி. ஆனால், வைரமுத்துவின் புத்தகங்களில் காகித வாசனை இருக்காது பதிலாக மண் வாசனை கமழும். கருத்தமாயி, சிட்டமாவிற்கு நாமும் மகன்களாக கூடாதா, அட்டணம்பட்டி தெருக்களில் நாமும் வளம் வர கூடாதா, சின்னப்பாண்டியுடன் சேர்ந்து நாமும் இந்த உலகத்தை, உலக உயிர்களின் அத்தியாவசியமான விவசாயத்தை இயற்க்கை நோக்கி திருப்ப மாட்டோமா, அந்த அட்லாண்டா அழகு தேவதை எமிலியை ஓரப்பார்வை பார்க்கும் புண்ணியம் கிட்டாதா, இஷிமுரா நட்பு அமையாதா, தலப்பெரட்டு புடிச்ச பய முத்துமணிய ஒரு எத்து எத்தலாமா, சீனிச்சாமி கடன் கழிய நாமும் உதவ மாட்டோமானு மனசு ஏங்கி தவிக்குமய்யா..!!. மனிதா, நாம் பணம் பின்னால் ஓடுகிறோம், பதவியின் பின்னால் ஓடுகிறோம் வியர்வைக்கு வழியேயில்லை என்றாலும், வழிந்து விடுமோ என்ற அச்சத்தில் கைக்குட்டையுடன் ஓடுகிறோம், பசியென்று வந்தால் நாம் வியர்வையில் நனைந்து ஏரை தோளில் சுமந்து நடை போடும் விவசாயியின் பின்னால் தான் ஓடுகிறோம். என்னை பொருத்தவரை வாளை பிடித்தவனை விட ஏரை பிடித்தவன் தான் வீரன்.

ஐயா வைரமுத்து ஒரு வேளை நான் எழுத்துத்துறைக்கு வந்தால் அதற்கு காரணம் உங்கள் கருவாச்சியும், மூன்றாம் உலகப்போரும் தான்.

No comments:

Post a Comment