Thursday, 9 February 2017

மூன்றாம் உலகப்போர் - Third World War - வைரமுத்து - Vairamuthu


மூன்றாம் உலகப்போர்-போர்கள் மனித நாகரிகத்தின் அடித்தளம். எங்கெல்லாம், எப்பொழுதெல்லாம் போர்கள் நடந்ததோ அங்கெல்லாம், அப்பொழுதெல்லாம் மனித நாகரிகம் அடுத்த கட்டம் நோக்கி முன்னேறியது. மரத்தில் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்களை, போர் புரிந்து அழித்து க்ரோமேக்னன் மனிதர்களாகிய நாம் நாகரிகம் அடைந்தோம். 

உலகம் முழுக்க தமிழர் வீரம் பரவியது நம் சேர-சோழ-பாண்டிய மன்னர்கள் கலிங்கம் முதல் சாவகம் வரை போர் புரிந்து வென்றதனால். ஜப்பானின் இன்றைய அசுர பொருளதார, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணம் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் "லிட்டில் பாய்" மற்றும் "பேஃட் மேனின்" விளையாட்டால் தான். முதலிரண்டு உலகப்போர்கள் மனிதனால் மனிதன் மீது தொடுக்கப்பட்டது. அங்கே ஆயுதங்கள் கொண்டு போர் செய்தனர். 

ஆனால், என் கவிஞர் கருப்புத்தங்கம் வைரமுத்து சொல்லும் மூன்றாம் உலகப்போர், மனிதன் இயற்க்கை மீது தொடுத்தானா? இல்லை இயற்க்கை மனிதன் மீது தொடுத்ததா? வினாக்கள் எவ்வாறாயினும் அழிவு மனிதனுக்கே. இன்று கையில் பீட்சாவும், பர்கரும் உண்டு வியர்வைக்கே வேலை வைக்காத வேலைக்கு சென்று கொண்டிருக்கிறோம். 

இன்னும் 50 வருடங்கள் கழித்து நம் பிள்ளைகள் பீட்சாவை தாங்கி பிடிக்குமளவு சிரமமில்லாமல் அதற்கு நேரமுமில்லாமல் ஒரு மாத்திரையை விழுங்கி ஒட்டம் பிடிப்பார்கள் அலுவலக வண்டியில். இதனை, புள்ளி விவரங்கள் மூலமாகவும் அறிவியல் மூலமாகவும் புத்திக்கு பாடம் சொல்கிறார் வைரமுத்து. 

பொதுவாக புத்தகத்தின் பக்கங்களில் காகித வாசனை விசிறியடிக்க படிக்கும் சுகமே தனி. ஆனால், வைரமுத்துவின் புத்தகங்களில் காகித வாசனை இருக்காது பதிலாக மண் வாசனை கமழும். கருத்தமாயி, சிட்டமாவிற்கு நாமும் மகன்களாக கூடாதா, அட்டணம்பட்டி தெருக்களில் நாமும் வளம் வர கூடாதா, சின்னப்பாண்டியுடன் சேர்ந்து நாமும் இந்த உலகத்தை, உலக உயிர்களின் அத்தியாவசியமான விவசாயத்தை இயற்க்கை நோக்கி திருப்ப மாட்டோமா, அந்த அட்லாண்டா அழகு தேவதை எமிலியை ஓரப்பார்வை பார்க்கும் புண்ணியம் கிட்டாதா, இஷிமுரா நட்பு அமையாதா, தலப்பெரட்டு புடிச்ச பய முத்துமணிய ஒரு எத்து எத்தலாமா, சீனிச்சாமி கடன் கழிய நாமும் உதவ மாட்டோமானு மனசு ஏங்கி தவிக்குமய்யா..!!. மனிதா, நாம் பணம் பின்னால் ஓடுகிறோம், பதவியின் பின்னால் ஓடுகிறோம் வியர்வைக்கு வழியேயில்லை என்றாலும், வழிந்து விடுமோ என்ற அச்சத்தில் கைக்குட்டையுடன் ஓடுகிறோம், பசியென்று வந்தால் நாம் வியர்வையில் நனைந்து ஏரை தோளில் சுமந்து நடை போடும் விவசாயியின் பின்னால் தான் ஓடுகிறோம். என்னை பொருத்தவரை வாளை பிடித்தவனை விட ஏரை பிடித்தவன் தான் வீரன்.

ஐயா வைரமுத்து ஒரு வேளை நான் எழுத்துத்துறைக்கு வந்தால் அதற்கு காரணம் உங்கள் கருவாச்சியும், மூன்றாம் உலகப்போரும் தான்.

கருவாச்சி காவியம் [Karuvachi Kaviyam] வைரமுத்து

முடிஞ்சு போச்சு.

சில நாளா என் ஓய்வு நேரத்துல பங்கெடுத்து என் நாளுல ஒன்னாகி போன கருவாச்சி காவியம் கடைசி பக்கம் வந்தாச்சு. இந்தா இந்தான்னு கடைசி வார்த்தையும் மனசில பதிஞ்சு போச்சு.

வெள்ளிதிரையில மண் வாசன மணந்துருக்கு பாரதிராசா காலத்துல. வெள்ள காகிதத்துல அதே வாசம் அடிச்சிருக்கு கருவாச்சி காவியத்துல.

"ஏன்டா இத்தன நாளு சும்மா தான கெடந்த, நா சந்தையில இறங்கி பல நாள் ஆச்சு, பல வீட்டு அலமாரியில என் வாழ்க்க பழசாகி போச்சு. எந்த ஊரு திருவிழாக்கு போச்சு உன் புத்தி ஊர விட்டு ஓடி போன காலு காசு கரஞ்சு போனதும் வீட்ட தேடி வார மாறி உன் புத்தி மழுங்கி போனதும் என்ன தேடி வாரியா நீ...!!" கருவாச்சி கேக்க.

ஏ..!! ஆத்தா, நிறுத்து உன் பாட்ட. கொஞ்ச நாளா புத்தகம் வாசிக்க புத்தியில்லாம போச்சு. எம் பொழப்பே சிரிப்பா சிரிக்க, நா எங்க உம் பொழப்ப படிக்க. களைப்பா போன என் மனசு உன்ன தேடி இளைப்பாற வந்திருக்கு வழிய விடுன்னு பெரட்ட ஆரம்பிச்சிட்டன் அவ வரலாற.

நா பக்கத்த வேகமா பெரட்டுறத விட பக்கத்துக்கு பக்கம் அவ வாழ்க்கய கள்ளிகாட்டு புழுதி மணல பெரட்டோ பெரட்டோன்னு பெரட்டிடான் ஆண்டவன். கருவாச்சின்னு நெறத்துக்கு ஏத்தாப்போல பேரு வச்சதுக்கு. பொழப்புகேத்தாபோல பேரு வெச்சிருகலாம் அழுகாச்சின்னு. எப்புடி தான் தாக்குபுடிச்சுதோ இந்த வெள்ள காயிதம் கண்ணீர சிந்தாம.

தரிசா இருந்த நிலத்துல மொளச்ச கருவேல மரமா போனான் கட்டையன் அவ வாழ்க்கையில. ஒண்ணுக்கும் ஒதவாது கருவேல மரம். ஆனா காஞ்ச முள்ளால கால தச்சிடும் மேல வெளஞ்ச நிலத்த பொட்டையாக்கிடும், வேற எந்த சீவ ராசியயும் வாழ வளர விடாது. அதபோல தான் அவன் கருவாச்சியயும் அவள ஒட்டுனவகளயும் பாடா படுதிட்டு தீக்கு இறையாக போற வயசுல புத்தி தெளிஞ்சான்.

தாய மதிக்காத புள்ள நாசமாதான் போகும்ன்னு சொல்லிட்டான் அழகுசிங்கம். வேசி வீட்டுக்கு போனப்பவே பொட்டாயாகி போனான் மவன். அதனால தான் ஆத்தாளும் அடையாளம் காணாம பண்ணிட்டான் ஆண்டவன். கொல குத்தம் பண்ணாலும், நீ அவளயே கொல்ல துணிஞ்சாலும், தடம் மாறி போனாலும் அதெல்லாம் இடம் இல்லாம போகுமடா தாய் பாசம் முன்ன.

மழ அடிச்சாலும் அளவா அடிக்கனும். அதுக்கேத்த வாய்கால வெட்டனும் இல்லனா பயிருல தண்ணி தேங்கி அது அழுகிபோயிரும். அதே தான், திம்சோட பாசத்துல திகட்ட திகட்ட மெய் மறந்து போனக சடையப்பரும் கட்டையனும். சொக்கி போனக ரெண்டு பேரும், பதாளத்துல தள்ளி மண்ணள்ளி மூடிட்டா பேயம்மா. கருவாச்சி புண்ணியத்துல சாவு தள்ளி போச்சு அவனுக்கு.

நா செயிக்குறனோ இல்லயோ, தோக்கமாட்டன்னு சொன்னா கருவாச்சி. சொல்ல செயலாக்கி காட்டிட்டால.

முடிவ நாம தான் எடுத்துக்கனும். அவ செயிச்சாலா இல்லயானு. ஆனா, அவ தோக்கலாயா.

கருவாச்சிய விமர்சனம் பண்ண எனக்கு அவள உருவாக்கின வைரமுத்த விமர்சனம் பண்ண தகுதி இல்ல.

இனி நான் ஆயிரம் புத்தகம் புரட்டலாம். அதெல்லாம் இந்த கள்ளி காட்டு இளவரசிக்கு ஈடாகுமா தெரியல.

Wednesday, 8 February 2017

லாக்கப் - சாமான்யனின் குறிப்புகள்

லாக்கப் - சாமான்யனின் குறிப்புகள்

பொதுவாக சில பேய் மற்றும் த்ரில்லர் திரைப்படங்களில் எச்சரிக்கை வாசகம் போடுவார்கள் 'இதயம் பலவீனமானவர்கள், இதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டாம்' என்று.

ஒரு வேளை அதை புத்தகங்களிலும் போடும் வழக்கம் இருந்திருந்தால் மு. சந்திரகுமார் இதில் நிச்சயம் போட்டிருப்பார். இதயம் பலவீனமானவர்கள், இதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இந்த புத்தகத்தை/நாவலை படிக்க வேண்டாம் என்று. ஒரு வேளை இதுமாதிரி புத்தகங்கள் வெளிவருவது அரிதினும், அரிது என்பதால் அந்த வழக்கம் இல்லையென நினைக்கிறன்.  அவ்வாறு, எச்சரிக்க காரணம் ஆபாசமோ, பேய் மிரட்டலோ அல்ல ஒரு வித சகிக்க முடியாத
அருவெறுப்பு, சோகம், வலி, வேதனை, எல்லாவற்றையும் தாண்டி எந்த மனிதனும் வெறுக்க கூடிய விஷயங்கள்.

தமிழில் சென்ற வருடம் (2016ல்) வெளிவந்து தேசிய விருதுகளை அள்ளியது மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு பரிந்துரைக்க பட்ட திரைப்படமான 'விசாரணை' மு. சந்திரகுமாரின் லாக்கப் நாவலை மையமாக
கொண்டு எடுக்கப்பட்டது. அந்த திரைப்படம் பார்த்தவர்கள் "லாக்கப்" நாவலை பற்றி அறிவார்கள், சந்திரகுமாரை பற்றி அறிவார்கள். இதுவரை இருந்த என் கருத்தை "எந்த ஒரு உணர்வையும், உணர்ச்சியையும், திரையில் தான், கண்களால் காண வைப்பது மூலம் தான் அதிகம் மக்கள் மனதில் பதிய வைக்க முடியும்" என்பதை சுக்கு நூறாக உடைத்தெறிந்து விட்டது லாக்கப் நாவல். திரையில் "விசாரணை" படம் பார்த்து உள்ளுக்குள் அனேக பேருக்கு குறிப்பாக சாமானிய மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு ஒரு வித அச்ச உணர்வு உண்டாகி இருக்கும். ஒரு வேளை சந்திரகுமார் நேரடியாக உண்மையாக, பாதிக்கப்பட்டவர் என்பதால் என்னவோ திரையை விட அதிகம் எனக்கு அச்ச உணர்வும், அருவெறுப்பும், பரிதாபமும் தந்து விட்டார். இன்னொன்ரும், காரணமாக இருக்கலாம் நாவலில் சொன்ன நிறைய விஷயங்களை, சந்திரன் அனுபவித்த கொடுமைகளை, உண்மைகளை பெண்களும், குழந்தைகளும், குடும்பங்களும் கூடி பார்க்கும் சினிமாவில் காட்டுவது கடினம். காட்டவும் முடியாது. அது ஏன் என்று இதில் அறிவீர்கள்.

மனிதனின் அடிப்படை உரிமை எது? சாப்பாடு ?, இருப்பிடம் ?, வாழும் உரிமை?. எல்லாவற்றையும் தாண்டி ஒன்று உள்ளது இயற்கை உபாதைகளை கழிப்பது. அதை இயற்கையாலும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த உரிமை கூட மறுக்கபட்டால் அந்த உயிர் பூமியில் இனியும் வாழ முடியுமா? மறுக்கப்பட்டது சந்திரனுக்கும், சகாக்களுக்கும், பிற சிறைகைதிகளுக்கும். பத்துக்கு பத்து அகல அறையில் குறைந்தபட்சம் ஏழு பேர் அதிகபட்சம் இருபத்தியோரு பேர். சிறுநீர் கழிக்க வேண்டுமானால் கூட போலீசாரிடம் கேட்டால் திறந்து விடமாட்டார்கள், என்று அந்த சிறிய ஓட்டை வழியே கழித்தது, அந்த குடலை பிடுங்கும் நாற்றத்துடன் அங்கேயே தங்கியது, தவிர வியர்வை நாற்றம், குளிக்க முடியாத நாற்றம், அதையும் தாண்டி சிறைகைதி ஒருவன் நடுராத்திரியில் அடக்க முடியாமல் போன மல நாற்றம் என்ன எந்த மனிதனும் சகித்து கொள்ளவே முடியாத, சொல்லப்போனால் சகித்து கொள்ளவே கூடாதவற்றை சகித்து கொண்டு, அங்கேயே ஒரு வேளை சோறுண்டு வாழ்ந்திருகிறார்கள் என்பதை விட செத்திருகிறார்கள் என்று சொல்லலாம்.

ஒரு வேளை இது மாதிரியான தண்டனைகள் தவறு செய்தவன் அனுபவித்தால் அதை ஒருக்கால் ஏற்றுகொள்வோம். ஆனால், எந்த தவறும் அறியாதவர்கள், அந்த தவறே செய்யாதவர்கள் விசாரணை என்ற பெயரில் இந்த ரணங்களை அனுபவித்தால் ?? ஆம், நமக்கு பரிச்சயபட்ட கைதிகள் யார் என்று பார்த்தால். தூக்குதண்டனை கைதி, ஆயுள் தண்டனை கைதி, கடைசியாக தான் "விசாரணை கைதி", அதாவது வெறும் வெற்று சந்தேகத்தின் பேரில் விசாரிக்க காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு, பல நேரங்களில், பல வழிகளில் எந்த சம்மந்தமும் இல்லாமல் துன்பப்பட்டு, துன்பத்திற்கு ஆளாகப்படுபவர்கள். அந்த, விசாரணை கைதிகளின் அடிப்படை உரிமைகள் தான் அதிகம் பறிக்கப்படும். குற்றம் செய்த உண்மையான கைதிகளுக்கு கூட மூன்று வேளை சோறு, மருத்துவ உதவி, துப்பாக்கி ஏந்திய போலிஸ்களுடன் உயிர் பாதுகாப்பு நிச்சயம் (அது தப்பியதை கடந்த நாட்களில் நாம் பார்த்திருக்கலாம், ஆனால், ஒரு வகையில் அதுவும் விசாரணை கைதி என்ற வகைக்குள்ளே அடங்கும் என பலர் அறிவர்). உடல் சிதைக்கபடும், உள்ளம் வதைக்கப்படும், மனிதனை காக்க தான், இன்னொரு மனிதன், நீதி, கோர்ட் என்று எது இருந்தாலும் அது மாற்றப்படும்.

என்னால் புத்தகத்தின் அறுபது, அறுபத்தி இரண்டாவது பக்கங்கள் வரையிலும், நூற்றிஇருபது,நூற்றிஇருபத்தி இரண்டு  பக்கத்தையும் மறக்கவே முடியாது. என்னவோ நானே அங்கே நின்று "சம்மட்டி" அடியும், இரவு முழுக்க கோழைத்தனமான வன்முறையால் என் உடல் சிதைக்கப்படுவதும் போல உணர்ந்தேன். அவ்வுளவு வலி, வேதனை, ரத்தம் மட்டும் இல்லை. "உள்ளங்கால் எலும்பு சதையின்றி மண்ணில் குத்துவது போல" என்று அவர் சொல்லும் பொழுதெல்லாம் என் உள்ளங்கால் சில்லிட்டது. மனம் கணத்தது.

இருண்ட அறைக்குள் எத்தனை குமுறல்கள், வலிகள், வேதனைகள். அதிகாரம் என்றுமே அது இருப்பவனிடமும், பணம் இருப்பவனிடமும் வேளை செய்வதே இல்லை. அது சாமானியனின் கைகளை தான் கட்டி போடுகிறது. பயம் காட்டுகிறது. மனித உரிமைகள் மீது அக்கறை கொண்டவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் "லாக்கப்". "விசாரணை" படம் பார்த்திருந்தாலும் எந்த இடத்திலும் நிற்காத வேகமான ஓட்டம். அந்த உணர்வே இருக்காது, பல நேரங்களில் மனம் உணர்ச்சியற்று போகும்.

அடி, உதை, சத்தம், "**தா", "**மாலே" என ஆபாசம் தெறிக்கும் வார்த்தைகள், பொய், வலி அந்த சூழ்நிலையிலும் அவர்கள் அனுபவிக்கும் அற்ப சந்தோஷங்கள் இதுவெல்லாம் "லாக்கப்"பில் ஏராளம், தாராளம்.